போலீசாரை தாக்கிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய ரவுடி
பெங்களூருவில் நேபாள பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான ரவுடி போலீசாரை தாக்கிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.;
பெங்களூரு: பெங்களூருவில் நேபாள பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான ரவுடி போலீசாரை தாக்கிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
நேபாள பெண் கற்பழிப்பு
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேபாள நாட்டை சேர்ந்த பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் வசிக்கும் வீட்டுக்குள் புகுந்து ஒரு மர்மநபர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். பின்னர் தப்பி ஓட முயன்ற நபரை பிடித்து டி.ஜே.ஹள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர் டி.ஜே.ஹள்ளியை சேர்ந்த ஆவேஜ் (வயது23) என்று தெரிந்தது.
இவர், பிரபல ரவுடி ஆவார். கமர்சியல்தெரு போலீஸ் நிலையத்தில் ஆவேஜ் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும் ரவுடி ஆவேஜ் மீது 26 வழக்குகள் உள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் ஆவேஜ், பெங்களூருவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே ஒரு முறை சட்டவிரோதமாக பெங்களூருவுக்குள் நுழைந்ததால், ஆவேஜ் மீது டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள்.
ரவுடி தப்பி ஓட்டம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பெங்களூருவுக்குள் நுழைந்ததுடன், வீடு புகுந்து நேபாள பெண்ணை கற்பழித்தது தெரியவந்தது. ஆவேஜிடம் விசாரணை நடத்திவிட்டு, அவரை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு டி.ஜே. ஹள்ளி போலீசார் அழைத்து சென்றார்கள். பரிசோதனை முடிந்ததும் ஆவேஜை போலீசார், வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து 2 போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு ரவுடி ஆவேஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் விரட்டி சென்றார்கள். ஆனாலும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டார்.
2 தனிப்படைகள் அமைப்பு
இதையடுத்து, தலைமறவைாகி விட்ட ஆவேஜை கைது செய்ய உதவி போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ரவுடி ஆவேஜை கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர். இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.