சாதியை சொல்லி பெண்ணை திட்டியதாக வழக்கு: ஓட்டல் உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
சாதியை சொல்லி பெண்ணை திட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஓட்டல் உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.;
சேலம்,
சேலம் அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பாலன் (வயது 62). ஓட்டல் உரிமையாளர். இவரிடம் சேலத்தாம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். சில மாதங்கள் வட்டி கொடுத்த பிறகு அவரால் வட்டி கொடுக்க முடியவில்லை. அந்த பெண் வட்டி கட்ட முடியாததால், அவருடைய 12 வயது மகனை பாலன் ஓட்டலுக்கு அழைத்து சென்று வேலைக்கு அமர்த்தி உள்ளார். மகனை திரும்ப தன்னிடம் ஒப்படைக்கும்படி அந்த பெண் பாலனிடம் கூறியுள்ளார். அதற்கு பாலன் சாதியை சொல்லி திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. சாதி பெயரை சொல்லி பெண்ணை திட்டியதாக ஓட்டல் உரிமையாளர் பாலனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பு அளித்தார்.