சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய அண்ணன்- தம்பி கைது

சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-01 21:06 GMT
சூரமங்கலம், ஏப்.2-
ரெயிலில் சோதனை
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 13351) கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், சக்திவேல், கவியரசு ஆகியோர் அந்த ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர்.
அப்போது எஸ்-3 பெட்டியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 பெரிய பைகளுடன் இருந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் ஒடிசா மாநிலம் சுபர்ணாபூர் பகுதியை சேர்ந்த தரணி நாயக் (வயது 22), அவருடைய தம்பி தரண் நாயக் (20) என்பதும், அவர்கள் காத்திருப்போர் பட்டியல் பயணச்சீட்டுடன் ரெயிலில் ஏறி டிக்கெட் பரிசோதகர்களிடம் அபராதம் செலுத்தி பயணம் செய்து வந்ததும் தெரியவந்தது.
21 கிலோ கஞ்சா பறிமுதல்
அவர்கள் வைத்திருந்த 2 பைகளை போலீசார் சோதனை நடத்தினர். இதில் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தரணி நாயக், தரண் நாயக் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே ரெயிலில் எஸ்-10 பெட்டியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்திய போது அங்கு கிடந்த பையில் 5 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கஞ்சா ஈரோடு ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்