டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
டீசல் விலை உயர்வு, ரிக் வண்டிகளுக்கு பயன்படுத்தும் ஆயில், உபகரணங்கள் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக ரிக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. சேலம் அருகேயுள்ள பனமரத்துப்பட்டி, கருப்பூர் பகுதிகளில் ரிக் உரிமையாளர்கள் தங்களது வண்டிகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சேது கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிக் வண்டிகள் ஓடுகின்றன. டீசல் விலை உயர்வால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வால் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் தான் கூடுதல் கூட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. எனவே, டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.