‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடையை தூர்வார வேண்டும்
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் விழுந்து கிடக்கிறது. இதனால் சாக்கடை கழிவுநீர் போக முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் வாரச்சந்தையில் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. எனவே வாரச்சந்தையில் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன், குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.
சாலை அமைக்க வேண்டும்
கொடுமுடி அருகே உள்ள அய்யம்பாளையம் சுமைதாங்கி புதூரில் உள்ள ரோட்டில் கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாத சாரிகள் சிரமப்பட்டு நடந்து செல்கிறார்கள். எனவே சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சுமைதாங்கி புதூர்.
ரோட்டில் சாயும்நிலையில் மரம்
பவானி அருகே உள்ள கல்பாவி கிராமத்தில் இருந்து எட்டிக்குட்டைக்கு சாலை செல்கிறது. இந்த ரோட்டில் கல்பாவி ஊராட்சி அலுவலகம் அருகே மரங்கள் வளர்ந்து ரோட்டை நோக்கி சாய்ந்தபடி உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கல்பாவி.
வெட்டி அகற்றப்படுமா?
அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் ரோட்டில் கெட்டிசமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் பெரிய மரம் ஒன்று பட்டுப்போய் காற்றடித்தால் விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகிறார்கள். யார் மீதாவது மரம் முறிந்து விழுந்துவிட்டால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். எனவே பட்டுப்போன அந்த மரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்.
மதுபிரியர்கள் அட்டகாசம்
அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி சனிச்சந்தை பகுதியில் காலை நேரங்களிலேயே மதுபிரியர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லும் இடங்களிலேயே அமர்ந்து மது குடிக்கிறார்கள். சில நேரங்களில் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். இதனால் பெண்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே போலீசார் சென்னம்பட்டி சனிச்சந்தை பகுதியில் காலை நேரத்தில் ரோந்து சென்று மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடு்க்க வேண்டும்.
பொதுமக்கள், சென்னம்பட்டி.
டிரான்ஸ்பார்மரை சுற்றி புதர்
அந்தியூரை அடுத்த வேம்பத்தி ஊராட்சி அலுவலகம் அருகே ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. ஒயர்களிலும் செடி, கொடிகள் சுற்றியுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்குள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள செடி-கொடிகளை அகற்ற ஆவன செய்வார்களா?
முருகன், வெள்ளாளபாளையம்.