நாகர்கோவிலில் கடந்த 3 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
நாகர்கோவிலில் கடந்த 3 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் கடந்த 3 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போக்குவரத்துக்கு இடையூறு
நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
அந்த வகையில் 2 நாட்களில் மட்டும் 84 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்படும் ஒரு வாகனத்துக்கு ரூ.760 அபராதமாக விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த வரும்போது வாகனத்துக்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாவிட்டால் கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்களில் 78 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வாங்கும் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தியதுடன் இனிமேல் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த மாட்டோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வாகனங்களை பெற்று செல்கிறார்கள்.
3-வது நாளாக...
இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 20 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.