காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை-அமைச்சர் சேகர்பாபு தகவல்
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அச்சன்புதூர்:
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பஸ்கள் இயக்கம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில், அனைத்து தரப்பு மக்களும் கோவிலுக்கு சென்று வர வசதியாக மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் வரை இயங்கும் 2 மினி பஸ்களை கடையநல்லூரை சேர்ந்த உபயதாரர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த பஸ்கள் இயக்க தொடக்க விழா நேற்று நடந்தது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். பஸ்கள் இயக்கத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருமலை கோவில் அடிவாரத்தில் இருந்து தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-
தென்காசி கோவில்
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 45 கோடி ரூபாய் செலவில் நடைபெற இருக்கின்ற திருப்பணிகளில் பாலம் கட்டுவது, சுற்றுச்சுவர் கட்டுவது போன்ற பணிகள் செய்யப்பட உள்ளது.
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் அமைந்திருக்கின்ற பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்கு உண்டான கழிப்பறைகளை நவீனமான முறையில் கட்டமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
மலைப்பாதைகளில் அகலமாக இருக்கும் இடங்களில் பூங்காவனம் மற்றும் அமர்வதற்கான இருக்கைகளை ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்த கோவிலை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக ஆன்மிக பக்தர்களுக்கு ஒரு சுற்றுலா தலமாக உருவாகின்ற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த கோவிலுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்று இந்த ஆண்டு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மானியக் கோரிக்கைகளில் இடம் பெறச்செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கோவில் செயல் அலுவலர் அருணாசலம், இணை இயக்குனர் அன்புமணி, தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், தென்காசி ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான், கடையநல்லூர் ஒன்றிய தலைவர் சுப்பம்மாள், துணை தலைவர் ஐவேந்திரன், செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், அரசு ஒப்பந்ததாரர்கள் அருணாசலம் செட்டியார், ரவி-ராஜா, செல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.