தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு அபராதம்

தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-04-01 19:57 GMT
நெல்லை:

நெல்லை டவுனை சேர்ந்தவர் சிவமணி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை டவுனில் உள்ள ஒரு கடையில் வாங்கினார். அதில் பாதி தண்ணீரை குடித்து மீதியை வைத்திருந்த நிலையில் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக டவுனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். குடித்த தண்ணீர் சரியில்லையோ? என்ற சந்தேகத்தில் சிவமணி, தன்னிடமிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் மீதம் இருந்த தண்ணீரை பார்த்தார். அதில் கண்ணுக்கு புலப்படும் பொருட்கள் மிதப்பதை கண்டார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் புகார் செய்தார். உடனடியாக நுகர்வோர் சங்கத்தினர் சார்பில், சிவமணி வாங்கிய அதே கடையில் மற்றொரு தண்ணீர் பாட்டில் பில்லுடன் வாங்கப்பட்டது. அந்த பாட்டில் தண்ணீரிலும் சில பொருட்கள் மிதப்பது தெரிந்தது. எனவே சிவமணியும், நுகர்வோர் சங்க நிர்வாகிகளும் மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் புகார் செய்தனர்.
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வக்கீல் பிரபாகர், சிவமணி சார்பில் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தண்ணீர் பாட்டில் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அதனுடன் வழக்கு செலவு தொகை ரூ.3 ஆயிரம் சேர்த்து சிவமணிக்கு ரூ.28 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டை மாநில நுகர்வோர் ஆணையம் தள்ளுபடி செய்ததோடு நெல்லை நீதிமன்றம் விதித்த அபராத தொகை ரூ.28 ஆயிரத்துடன் மேலும் ரூ.2 ஆயிரம் செலவு தொகையையும் சேர்த்து சிவமணிக்கு வழங்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்