புதிய போலீஸ் கமிஷனராக சந்தோஷ்குமார் பொறுப்பேற்பு

நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சந்தோஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2022-04-01 19:36 GMT
நெல்லை:
நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சந்தோஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 

போலீஸ் கமிஷனர்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த துரைகுமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சந்தோஷ் குமார் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

புதிய போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், கூடுதல் துணை கமிஷனர் சங்கர், உதவி போலீஸ் கமிஷனர் நாகசங்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:-

குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரத்தில் தொடர் கொள்ளை, கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். போலீஸ் நிலையங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளை துரிதமாக முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி ரீதியாக செயல்படும் ரவுடிகள் மீதும், சாதிய மோதல்களில் ஈடுபட்டுவோர் மீதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். சட்டத்தை யார் மீறினாலும் அவர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை போலீசார் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை
பதவி ஏற்ற பின்னர் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் ஆகியோருடன் நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்