அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தை மீண்டும் செயல்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியிருக்கிறது. டாக்டர் அம்பாசங்கர் ஆணையத்தின் மூலம் 1985-ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைதான் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அந்த அறிக்கைக்கு பிறகு இன்றுவரை எந்த சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. அப்படியிருக்கும் சூழலில் அம்பாசங்கரின் அறிக்கையை ஏன் தி.மு.க. அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை, கவனக்குறைவாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
குழு அமைப்பு
டாக்டர் அம்பாசங்கரின் அறிக்கையை வைத்துதான் இன்றுவரை 69 சதவீத இட ஒதுக்கீட்டை நாம் காப்பாற்றி வருகிறோம். அன்றைக்கு இன்னொரு தீர்ப்பும் கூறப்பட்டது. இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறோம், அதே நேரத்தில் முழுமையான தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும், முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதுசம்பந்தமான வழக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கருதிய எடப்பாடி பழனிசாமி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைத்தார். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு உடனடியாக அதற்கான பணியும் ஆரம்பிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
69 சதவீத இடஒதுக்கீட்டையும் பாதிக்கும்
தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. பொறுப்பேற்றது. அதன் பிறகு என்ன நடந்தது? நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை. குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை ஏன் இந்த அரசு முடக்கியது. அந்த ஆணையம் இந்த ஓராண்டு காலம் செயல்பட்டிருந்தால் தனது அறிக்கையை அரசுக்கு முழுமையாக கொடுத்திருக்கும்.
அந்த தகவலை உச்சநீதிமன்றத்தில் நாம் சொல்லியிருந்தால் இன்றைக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்றியிருக்கலாம். இன்றைக்கு கொடுத்திருக்கிற தீர்ப்பினால்தான் நாளைக்கு 69 சதவீத இடஒதுக்கீடையும் பாதிக்கும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குலசேகரன் ஆணையத்தை மீண்டும் செயல்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த ஆணையம் கொடுக்கும் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர், மடிக்கணினி, பசுமை வீடு இப்படி பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது, ரத்து செய்கிறது. பெண்களுக்கான திட்டங்களை பறித்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரம் நகரில் விரைவில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், எசாலம் பன்னீர், நகர செயலாளர்கள் வண்டிமேடு ராமதாஸ், முருகவேல், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கோதண்டராமன், முன்னாள் அரசு வக்கீல் தமிழரசன் உள்பட பலர் உடனிருந்தனர்.