விவசாயி வெட்டிக்கொலை

நெல்லை அருகே விவசாயியை வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-01 19:30 GMT
மானூர்:
நெல்லை அருகே விவசாயியை வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விவசாயி

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமத்தை சேர்ந்தவர் அம்பலம் (வயது 72), விவசாயி. இவருடைய மனைவி முப்புடாதி என்ற சின்னம்மாள் (70). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் முப்புடாதிக்கு ரத்தக்கொதிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அம்பலம் மேலும் சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் முப்புடாதிக்கு சரிவர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வெட்டிக்கொலை

நேற்று மதியம் அம்பலம் தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு கிணற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் சிறிது நேரத்தில் படுத்து உறங்கியுள்ளார்.

ஏற்கனவே அம்பலம் மீது கோபத்தில் இருந்த முப்புடாதி, கையில் இருந்த அரிவாளால் அம்பலத்தின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தொடர்ந்து முப்புடாதி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

போலீசார் விசாரணை

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், மானூர் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.  தடயவியல் நிபுணர் ஆனந்தி வந்து ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தார்.

பின்னர் அம்பலத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவிக்கு வலைவீச்சு

இதுகுறித்து அம்பலத்தின் மகன் மாவூது (40) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முப்புடாதியை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவரை மனைவியே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்