10 ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
போக்குவரத்து விதியை மீறிய 10 ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் போலீசார் ஹரிகுமார், சதீஷ் ஆகியோர் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதிக்கப்படாத இடமான பூமாலை வணிக வளாகம் அருகில் 10 ஷேர் ஆட்டோக்களை அதன் டிரைவர்கள் வரிசையாக நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.
உடனே போக்குவரத்து விதியை மீறிய அந்த ஷேர் ஆட்டோக்களின் டிரைவர்களுக்கு தலா ரூ.200-ஐ போலீசார் அபராதமாக விதித்தனர். மேலும் இதுபோல் விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.