திருப்புவனம் ேகார்ட்டை வேறு இடத்துக்கு மாற்ற வக்கீல்கள் எதிர்ப்பு

திருப்புவனம் கோர்ட்டை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மாவட்ட நீதிபதி சமரசத்தை தொடர்ந்து அவர்கள் பணிக்கு சென்றனர்.

Update: 2022-04-01 19:26 GMT
திருப்புவனம், 

திருப்புவனம் கோர்ட்டை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மாவட்ட நீதிபதி சமரசத்தை தொடர்ந்து அவர்கள் பணிக்கு சென்றனர்.

திருப்புவனம் நீதிமன்றம்

திருப்புவனத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றம் திருப்புவனம் நகரின் மையப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகும் வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்காக சுமார் 4 ஏக்கர் இடம் தேவைப்படுவதாகவும் திருப்புவனம் நகரில் இடம் இல்லாததால் வேறு இடங்களில் 4 ஏக்கர் இடம் இருக்கிறதா? என நீதித்துறை, வருவாய் துறையினரும் பார்த்துள்ளனர். இதனால் நீதிமன்றம் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என கருதி, வக்கீல்கள் திருப்புவனம் நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது என்றும், புதிய நீதிமன்ற கட்டிடம் திருப்புவனம் பேரூராட்சி எல்லைக்குள் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து நேற்று 1-ந்தேதி முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். அதன்படி நேற்று கோர்ட்டை புறக்கணித்து போராட முயற்சித்தனர்.

நீதிபதி சமரச பேச்சுவார்த்தை

இந்த நிைலயில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா நேற்று திருப்புவனம் கோர்ட்டுக்கு வந்தார். முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதியை திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி வரவேற்றார். பின்பு நீதிமன்ற அலுவலக பகுதியில் வக்கீல்களுடன் மாவட்ட நீதிபதி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதேசமயம் வக்கீல்கள் சங்கம் கூறும் பகுதியில்தான் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார். மாவட்ட முதன்மை நீதிபதியிடம், வக்கீல்கள் பூவந்தி காவல் நிலைய வழக்குகள் அனைத்தும் சிவகங்கையில் நடைபெறுகிறது என்றும் பூவந்தி காவல்நிலைய வழக்குகளில் திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி வழக்குகளை திருப்புவனம் நீதிமன்றத்திற்கு மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிகள் குறித்து விரிவாக அனுப்பி வைக்கவும். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி கூறினார். இதையடுத்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்