வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது
சிவகாசி அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்தன் என்கிற பார்த்தீபன் (வயது 27). சுமைதூக்கும் தொழிலாளி. இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கள்ளிபட்டியில் பணி முடிந்து தனது நண்பர் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த சேதுராமன் மகன் துரைப்பாண்டி (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. இதில் சிகிச்சை பலனின்றி அரவிந்தன் இறந்தார்.
10 பேர் கைது
இதுகுறித்து துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக 4 பேரை பிடித்து நடத்திய விசாரணையின் போது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 6 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவகாசி முத்துராமலிங்கநகரை சேர்ந்த நாகராஜ் மகன் அருண்பாண்டியன் (வயது 31), மோகன் மகன் பார்த்தீபன் (32), கண்ணன் மகன் முத்துக்கிருஷ்ணன் (23), சந்திரன் மகன் பழனிசெல்வம் (37), செல்லத்துரை மகன் மதன் (32), நேருஜிநகர் ராமர் மகன் மாரீஸ்வரன் (27), ரிசர்வ்லைன் சிலோன் காலனி மகேஸ்வரன் மகன் ஹரிகுமார் (21) உள்பட 10 பேரை கைது செய்தனர். இதில் தங்கள் நண்பன் நவநீத கிருஷ்ணணை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அரவிந்தன் தலைமையிலான கும்பல் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததற்கு பழிக்குபழியாக இந்த கொலை சம்பவம் நடத்தியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.