வெப்பத்தை சமாளிக்க வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டி

கோடை வெப்பத்தை சமாளிக்க வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டி அமைத்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2022-04-01 19:19 GMT
பேரையூர், 
கோடை வெப்பத்தை சமாளிக்க வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டி அமைத்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பருவமழை
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர் வனப்பகுதி சுமார் 10 ஆயிரம் எக்டேரில் அமைந்துள்ளது. புலிகள் சரணாலயமான இந்த வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, கரடி, வரையாடுகள், காட்டுமாடுகள், மான்கள், செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. 
வனப்பகுதியில் உள்ள குட்டைகள் மற்றும் நீரோடைகளில், இருக்கும் குடிநீர் வனப்பகுதி உள்ள விலங்குகளுக்கு போது மானதாக இருக்கும். வனப்பகுதியில் கடந்த பருவமழை காலத்தில் போதிய அளவு மழை பெய்யாத நிலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 
குடிநீர் தொட்டி
கோடைகாலத்தில் வன விலங்குகளின் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக வனத்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. சாப்டூர் வனப் பகுதியில் வன விலங்குகள் இறங்கும் அடிவாரப் பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப் பட்டுஉள்ளது. பீட் நம்பர் 10-ல் சின்னகோட்டைமலை சரகம், மணலூத்து, பீட்நம்பர் 7-ல் தேன் மலையான் கோவில் சரகம், கேணி அருவி அருகில், தாணிப்பாறை ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வன பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மோட்டார் மூலம், குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு உள்ளது.
தட்டுப்பாடு
இது குறித்து சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி கூறியதாவது:- தற்போது கோடைகாலம் என்பதால் மலை மீது உள்ள வனப்பகுதியில் குட்டைகள் மற்றும் நீரோடை களில் தண்ணீர் குறைந்து உள்ளது. இதனால் வன விலங்கு களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அடிவாரப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்