ரூ.2 லட்சம் போலி பீடி பண்டல்கள் பறிமுதல்; 2 பேர் கைது
காரைக்குடியில் ரூ.2 லட்சம் போலி பீடி பண்டல்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
காரைக்குடி
காரைக்குடியில் போலி பீடிகளை தயார் செய்து பிரபல பீடி நிறுவனங்களின் லேபிள்களை ஒட்டி ஒரு கும்பல் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது. அதனையொட்டி மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள பீடி கம்பெனி கிளை மேலாளர் முகம்மது அப்துல்லா மற்றும் அவரது பணியாளர்கள் காரைக்குடியில் முகாமிட்டு அந்த கும்பலை தேடி வந்தனர். அப்போது நல்லையன் தெரு அருகே 2 பேர் பிரபல கம்பெனிகளின் லேபிள்கள் ஒட்டி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பீடி மொத்த வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கேட்ட போது அவர்கள் முகம்மது அப்துல்லாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா குருவன்கோட்டையை சேர்ந்த பாஸ்கர் (வயது 40),ராமகிருஷ்ணன்(29) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து பிரபல பீடி நிறுவனங்களின் லேபிள் ஒட்டப்பட்ட 687 பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன, அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். பின் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.