தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் விழா தொடர்பாக சமரச கூட்டம்
தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் விழா தொடர்பாக சமரச கூட்டம் நடந்தது.
சேத்துப்பட்டு
தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் விழா தொடர்பாக சமரச கூட்டம் நடந்தது.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் பழமைவாய்ந்த பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பங்குனி உத்திரத்தன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு முன்பு ஒரு பிரிவினர் ஒரு நாள் திருவிழா நடத்த வேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதற்கு 12 நாள் உற்சவம் செய்யக்கூடிய பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினர்.
கோவில் திருவிழா நடத்த ஒருபிரிவினர் அனுமதி கேட்டது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்பேரில் கோர்ட்டில் வழக்கு தொடுத்தவர் தரப்பைச் சேர்ந்தவர்களையும், எதிர் தரப்பினரையும் அழைத்து சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு செய்யாறு உதவி கலெக்டர் விஜயராஜ் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, போளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு முடிவை ஏற்று விழா நடத்துவதற்கு ஏற்றுக் கொள்வதாக இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இது குறித்த அறிக்கை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று செய்யாறு உதவி கலெக்டர் விஜயராஜ் கூறினார்.