மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு 4-ந் தேதி தொடங்குகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-04-01 18:49 GMT
மதுரை, 
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு 4-ந் தேதி தொடங்குகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் உலகப்புகழ் பெற்ற திருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
12 நாள் நடைபெறும் இந்த பெருவிழா வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. வருகிற 12-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
மீனாட்சி திருக்கல்யாணம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதியன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
 அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.
கட்டண சீட்டு
இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், திருக்கல்யாணம் கட்டண சீட்டு குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற அடிப்படையில் கொள்ளளவிற்கேற்ப பக்தர்களை திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
எனவே கோவில் இணையதளத்தில்  (www.maduraimeenakshi.org) வருகிற 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இது தவிர பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வரவேற்பு அறையில் மேற்படி நாட்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டண சீட்டில் 2,500 பேரும், 200 ரூபாய் கட்டண சீட்டில் 3,200 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
எந்தெந்த சான்றிதழ்கள்
கட்டணச்சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் கீழ்க்கண்ட 7 சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றை ஆள் அறியும் சான்றாக கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.
1) பான் கார்டு
2) வாக்காளர் அடையாள அட்டை 
3) பாஸ்போர்ட் 
4) வங்கி கணக்கு புத்தகம்
5) ஓட்டுனர் உரிமம் 
6) ரேஷன் கார்டு
7) ஆதார் கார்டு.
இந்த சான்றிதழ்களில் மொபைல் எண், இ-மெயில் முகவரி இருப்பின் விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குலுக்கல் முறை
அனுமதிக்கப்பட்ட இடத்தினை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து உறுதி செய்யப்பட்ட தகவல், பதிவு செய்த இ-மெயில் முகவரி அல்லது எண்ணிற்கு 8-ந் தேதி அனுப்பப்படும். போன் எண் தெரிவிக்காதவர்களது விவரம் கோவில் அலுவலகப் பலகையிலும், பிர்லா விஷ்ரம் வரவேற்பு அறையில் 8-ந் தேதி காலை 11 மணிக்கு ஒட்டப்படும்.
உறுதி செய்யப்பட்ட இ-மெயில், எஸ்.எம்.எஸ். கிடைக்கப்பெற்றவர்கள் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையுள்ள நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வரவேற்பு அறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணச் சீட்டு விற்பனை நிலையத்தில் அதற்கான தொகையை ரொக்கமாக செலுத்தி கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். 
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்
மேலும் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் ஆன்லைன் மூலமாக 9 மற்றும் 10-ந் தேதிகளில் தொகை செலுத்த வேண்டும். பின்னர் பணம் செலுத்தியமைக்கான ரசீது நகலினை 11-ந் தேதி காலை 10 மணி முதல் 12-ந் தேதி மாலை 5 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் கொடுத்து உரிய நுழைவு கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர வெளியூரில் வசிப்பவர்கள் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்கப் பெற்று ஆன்லைன் மூலமாக தொகை செலுத்திய நபர்களுக்கு மட்டும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மையத்தில் 13-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொகை செலுத்தியமைக்கான ரசீதினை காண்பித்து கட்டணச் சீட்டினை பெறலாம்.
ஒரு போன் எண்ணுக்கு ஒரு பதிவு
ரூ.500 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் 2 கட்டணச்சீட்டுகளுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ரூ.200 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் 3 சீட்டுகளுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500 மற்றும் ரு.200 கட்டணச் சீட்டுகள் என இரண்டையும் பதிவு செய்ய இயலாது. முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இணையதள விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.
12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டணச்சீட்டு வாங்க வேண்டும். பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு போன் எண் மட்டுமே பயன்படுத்த இயலும். 
9 மணிக்குள் வரவேண்டும்
திருக்கல்யாணம் 14-ந் தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 500 ரூபாய் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் கோவில் வடக்கு முனீஸ்வரர் சன்னதி ஓட்டிய வழியிலும், 200 ரூபாய் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். எனவே திருக்கல்யாண கட்டணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் அவர்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் காலை 9 மணிக்குள் அமர்ந்து திருக்கல்யாணத்தை கண்டு தரிசிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்