கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: சாயல்குடி போலீசார் விசாரணையை தொடங்கினர்
சாயல்குடி அருகே கல்லூரி மாணவி காதலன் கண்முன்னே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேற்கண்ட வழக்கினை கற்பழிப்பு வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ராமநாதபுரம்,
சாயல்குடி அருகே கல்லூரி மாணவி காதலன் கண்முன்னே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேற்கண்ட வழக்கினை கற்பழிப்பு வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான, காதல் ஜோடியிடம் 3 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் நகைகளை பறித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் போது கல்லூரி மாணவியை அந்த 3 வாலிபர்களும் கூட்டு பலாத்காரம் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் மேற்கண்ட பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட மாணவியிடம் நீதிபதி தனியாக வாக்குமூலம் பெற்றார்.
கற்பழிப்பு வழக்கு பதிவு
இந்த நிலையில் இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் நடைபெற்றதால் இந்த வழக்கு விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட காவல் துறைக்கு மாற்றி ஐ.ஜி. அஸ்ராகாக் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த வழக்கு விசாரணை மற்றும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சாயல்குடி போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த வழக்கினை கற்பழிப்பு வழக்காக மாற்றி சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளார்.