காரிமங்கலம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 62 மூட்டை குட்கா பறிமுதல் ஒருவர் கைது
காரிமங்கலம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 62 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 62 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் காரிமங்கலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காரிமங்கலம் அருகே உள்ள குப்பாங்கரை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோகுல், செல்வராஜ் மற்றும் போலீசார் திடீரென சோதனை நடத்த சென்றனர். போலீசாரை கண்டதும் அதேபகுதியை சேர்ந்த குமார் (வயது52) என்பவர் தப்பியோடி விட்டார்.
கைது- பறிமுதல்
இதையடுத்து போலீசார் குடோனில் சோதனை செய்த போது 62 மூட்டைகளில் குட்கா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10.21 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்ப பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.