தர்மபுரியில் ஜல்லிக்கட்டு விழா சீறிபாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம்

தர்மபுரி பாப்பிநாயக்கனஅள்ளியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிபாய்ந்த காளைகளை பிடிக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். இதில் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-01 18:20 GMT
தர்மபுரி,:
தர்மபுரி பாப்பிநாயக்கனஅள்ளியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிபாய்ந்த காளைகளை பிடிக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். இதில் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
தர்மபுரி அருகே பாப்பிநாயக்கனஅள்ளியில் செல்லியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தர்மபுரி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வினோத், ராஜா சோமசுந்தரம், அ.தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜல்லிக்கட்டின் தொடக்கத்தில் தர்மபுரி ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தரம், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் போட்டி விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. 
சீறிபாய்ந்த காளைகள்
பின்னர் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் மொத்தம் 350 காளைகள் பங்கேற்றன தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. 
ஜல்லிக்கட்டு போட்டியை 1000-க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்தபடி வந்தன. சீறிபாய்ந்து வந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். பல காளைகள் பிடிபடாமல் கம்பீரமாக சுற்றி வந்தன. ஒரு சில காளைகள் பிடிக்க வந்த காளையர்களை தூக்கி எறிந்தன.
10 பேர் படுகாயம்
அதே நேரத்தில் வாடிவாசலில் இருந்து திமிறியபடி ஓடி வந்த பல காளைகளின் திமிலை பிடித்த மாடுபிடி வீரர்கள் அவற்றை அடக்கி தங்கள் வீரத்தையும், திறமையையும் வெளிப்படுத்தினார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்காமல் திமிறியபடி சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளிக்காசு, சில்வர் அண்டா, குடம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த போட்டிகளின் முடிவில் 18 காளைகளை பிடித்த நாமக்கல்லை சேர்ந்த மாடுபிடி வீரர் அஜித்துக்கு முதல் பரிசாக பீரோ, 12 காளைகளை பிடித்த தேனியை சேர்ந்த முத்து கிருஷ்ணனுக்கு 2- வது பரிசாக டேபிள், 9 காளைகளை பிடித்த மதுரையை சேர்ந்த கார்த்தி சங்கிலி முருகனுக்கு 3-வது பரிசாக மின்விசிறி ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த காளையாக சேலம் உதயகுமாருக்கு சொந்தமான காளைக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்