ரூ.100 கோடி ஊழல் வழக்கு- அனில் தேஷ்முக், சச்சின் வாசேக்கு சி.பி.ஐ. காவல்

ரூ.100 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அனில் தேஷ்முக், சச்சின் வாசேவை சி.பி.ஐ. காவலில் எடுத்து உள்ளது.

Update: 2022-04-01 18:15 GMT
கோப்பு படம்
மும்பை, 
ரூ.100 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அனில் தேஷ்முக், சச்சின் வாசேவை சி.பி.ஐ. காவலில் எடுத்து உள்ளது.
அனில் தேஷ்முக் வழக்கு
முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.100 கோடி ஊழல் புகாரை கூறினார். 
அனில் தேஷ்முக், முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை மும்பையில் உள்ள ஓட்டல், மதுபான பார்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கூறியதாக அவர் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது. இதற்கிடையே இதே ஊழல் குற்றச்சாட்டில் பணப்பரிமாற்ற முறைகேட்டில் அமலாக்கத்துறையால் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டு ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இதேபோல வெடிகுண்டு கார் வழக்கில் சச்சின்வாசே தலோஜா ஜெயிலில் உள்ளார்.
சி.பி.ஐ. காவல்
இந்தநிலையில் ரூ.100 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அனில் தேஷ்முக், அவரது கூட்டாளி சஞ்சீவ் பாலன்டே, குந்தன் ஷிண்டே மற்றும் சச்சின்வாசேவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் என்.ஐ.ஏ. மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சிறப்பு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்து இருந்தனர். 
இதில் சிறப்பு கோர்ட்டுகள் அனில் தேஷ்முக், சச்சின் வாசே உள்ளிட்ட 4 பேரையும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

மேலும் செய்திகள்