விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு கேபிமுனுசாமி எம்எல்ஏ உண்ணாவிரதம்

சூளகிரியில் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் இருந்தார்.

Update: 2022-04-01 18:11 GMT
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னபள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக கூறியும், அதை கண்டித்தும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நேற்று சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். 
அப்போது, உண்ணாவிரத பந்தலுக்கு வந்த ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் நீலமேகன் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கையை தெரிவிக்குமாறு கே.பி.முனுசாமிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், கோரிக்கைகளை, உதவி கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் விளக்கி கூறினார். மேலும், மாலை 5 மணி வரை, தான் அமர்ந்துள்ள இடத்தைவிட்டு எழ முடியாது என்றும் கே.பி.முனுசாமி அவர்களிடம் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விவசாய நிலங்களை, அரசு கையகப்படுத்தக்கூடாது என்பது தான் இந்த அடையாள உண்ணாவிரதத்தின் நோக்கமே தவிர, இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. தரிசு நிலம் மற்றும் விவசாயத்திற்கு உபயோகமற்ற நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்பு வழங்கலாம். அந்த வகையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அரசு நிலங்கள் நிறைய உள்ளன. அவற்றை கையகப்படுத்தி, தொழிற்சாலைகள் அமைக்க வழங்கலாம். மேலும் தொழில் முனைவோருக்கு கூடுதல் வசதிகளை அரசு செய்து தரவேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மலர்கள் விளைவதற்கு ஏற்ற நல்ல தட்ப வெப்பநிலையை கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எந்த பகுதியிலும், விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்