பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
கரூர் அரசு மருத்துவமனையில் பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2020-ல் நியமிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து பணிபுரிய பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2021 டிசம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக்கூறி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.