சோலார் மின்கம்பங்கள் அமைத்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு; பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் கருத்து கேட்பு

க.பரமத்தி அருகே சோலார் மின்கம்பங்கள் அமைத்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அங்கு பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

Update: 2022-04-01 17:53 GMT
கரூர்
க.பரமத்தி, 
தனியார் சோலார் மின் உற்பத்தி
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், நடந்தை ஊராட்சி வேட்டையார்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சுற்று பகுதியில் உள்ள கோடங்கிபட்டியில் உள்ள தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வேட்டையார்பாளையம் வழியாக ஆண்டிசெட்டிபாளையம் துணை மின் நிலையத்திற்கு செல்லும் வழி தடத்தில் சாலையோரத்தில் மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இவ்வழியாக அதிக மின்னழுத்தம் கொண்டு செல்வதால் இடி, மின்னல் நேரங்களில் வீட்டில் உள்ள மின் உபயோகப் பொருட்களான டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைந்து விடுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
மின்கம்பம் நடும் பணி
தற்போது மீண்டும் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் 5 ஏக்கர் அளவில் சோலார் பேனல் அமைத்து வேட்டையார்பாளையம் வழியாக ஆண்டிசெட்டிப்பாளையம் உள்ள துணை மின் நிலையத்திற்கு 2கேவி மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில் சாலையோரங்களிலும் கம்பம் நடும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ஒரு புறம் மின்கம்பங்கள் வழியாக மின்சாரம் செல்லும் நிலையில் தற்போது இந்த புதிய நிறுவனம் இன்னொரு புறமும் கம்பம் நட்டு வருகிறது, சாலையோரம் இருபுறங்களிலும் மின் கம்பம் நட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வேட்டையார்பாளையம் ஊர் பொதுமக்கள் இந்த புதிய சோலார் மின் திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது மாற்று பாதையில் மின்கம்பங்கள் பதித்து மின்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்து கேட்பு
இந்நிலையில் வேட்டையார்பாளையம் கிராமத்துக்கு நேரில் வந்த பா.ஜ.க. மாநிலதலைவர் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து சோலார் மின் பாதையால் கிராமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் குடியிருப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மின்பாதை பிரச்சினை குறித்து 2 நாட்களுக்குள் ஒரு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது கரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் வி.வி.செந்தில்நாதன் மற்றும் பலர் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்