பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
கிருஷ்ணராயபுரத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிருஷ்ணராயபுரம்
முற்றுகை போராட்டம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மஞ்சமேடு மணிநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மஞ்சமேடு மணிநகர் பகுதிக்கு செல்லும் பொதுப்பாதை குறுகலாக உள்ளதால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத உள்ளது. எனவே பொதுப்பாதையை விரிவுப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் மனு கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பொதுப்பாதையை அளவீடு செய்து பார்த்தபோது, சிலர் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மஞ்சமேடு மணிநகர் பொதுமக்கள் உடனடியாக ஆக்கிமிரமைப்பை அகற்றக்கோரி கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுத்து நிறுத்தம்
இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறி அதனை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகவடிவேல், தாசில்தார் யசோதா, மாயனூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகந்தி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அளவீடு செய்யப்படும்
இதுகுறித்து கோட்டாட்சியர் புஷ்பாதேவி கூறுகையில், பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தகவல் வந்தது. இதனை சிலர் தங்களுடைய இடம் என கூறுகின்றனர். அதனால் நாளை (அதாவது இன்று) சர்வேயரை கொண்டு அந்த இடத்தை அளவீடு செய்யப்படும். அப்போது அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என தெரியவந்தால் உடனடியாக அந்த இடம் அப்புறப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.