ராசிபுரம் அருகே கிணற்றில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
ராசிபுரம் அருகே கிணற்றில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை;
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூர், ஓனாச்சிகாடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரது பாழடைந்த விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக புதுச்சத்திரம் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு புதுச்சத்திரம் போலீசார், ராசிபுரம் தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து சென்றனர். இரவு நேரம் என்பதால் போதிய மின் வெளிச்சம் இல்லை. இதையொட்டி மின்விளக்கு வசதிக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் மின்விளக்கு வசதி செய்தவுடன் தீயணைப்பு படையினர் கிணற்றில் பிணமாக மிதப்பவரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் தீயணைப்பு படையினர் கிணற்றிலிருந்து உடலை மீட்டனர். கிணற்றில் பிணமாக கிடந்தவர் டீ-சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர் பேண்டில் வைத்திருந்த மணிபர்சில் ஆதார் அட்டை, செல்போன்கள் ஆகியவை இருந்தன. புதுச்சத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சத்திரம் போலீசார் கிணற்றில் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.