டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து 2-வது நாளாக ரிக் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து 2-வது நாளாக ரிக் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
எலச்சிபாளையம்:
டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து 2-வது நாளாக ரிக் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜி.எஸ்.டி.
தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டீசல் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு ரிக் உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர். டீசலுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீத வரியிலிருந்து 5 சதவீத வரிக்கு உட்படுத்த வேண்டும். டீசலை ரிக் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். ரிக், போர்வெல் கட்டணத்தை அடிக்கு 15 ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி நேற்று 2-வது நாளாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கந்தம்பாளையம், வேலகவுண்டம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், கோவை, மதுரை, தேனி, சென்னை, தர்மபுரி மாவட்டங்களில் ரிக் வண்டிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் பாதிப்பு
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை காலத்தில் விவசாய பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகத்திற்கு போர்வெல் அமைத்து தண்ணீரை பயன்படுத்த மக்கள் தயாராகி வருகின்றனர். தற்போது வேலை நிறுத்தத்தால் ரிக், போர்வெல் வாகன தேவை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.