செஞ்சி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு தாமதமாக வந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள்
செஞ்சி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு திருப்புதல் தேர்வு வினாத்தாள் தாமதமாக வந்தது. சரியான திட்டமிடல் இல்லாமல் நடப்பதால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.
செஞ்சி,
செஞ்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 75 பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு காலை 10 மணிக்கும், பிளஸ்-2 தேர்வு மதியம் 2 மணிக்கும் நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 மாணவர்களுக்கு வேதியியல் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்காக மாணவர்கள் தேர்வு அறைக்கு சென்றனர். ஆனால் வினாத்தாள் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், தேர்வு அறையை கவனிக்க வந்த ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அதற்கு ஆசிரியர்கள், இதுவரை பள்ளிக்கூடத்திற்கே வினாத்தாள் வரவில்லை என்றனர். இதனால் தேர்வு நடக்குமா?, நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்களிடையே நிலவியது.
தாமதமாக வந்த வினாத்தாள்
இதற்கிடையில் மாலை 4 மணிக்கு வினாத்தாள் பள்ளிகளுக்கு வந்தது. வழக்கமாக தேர்வு 2 மணிக்கு தொடங்கி, மாலை 4.30 மணிக்கு முடிவடைந்திருக்க வேண்டும்.
ஆனால் வினாத்தாள் தாமதமாக வந்ததால் தேர்வும் தாமதமாக தொடங்கியது. இந்த தேர்வு மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது வீடுகளுக்கு செல்ல தாமதம் ஏற்பட்டது.
மெயிலில் வந்த வினாத்தாள்
இதேபோல் இன்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இதற்காக மாணவர்கள் தேர்வறைக்கு சென்றனர். ஆனால் வினாத்தாள் வரவில்லை. இதனால் வகுப்பறையிலேயே காத்திருந்தனர். இதனிடையே செஞ்சி கல்வி மாவட்ட அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு மெயில் மூலம் அறிவிப்பு ஒன்று வந்தது. அதில், மெயில் மூலம் வினாத்தாள் அனுப்பி உள்ளதாகவும், அந்தந்த பள்ளிகளில் பிரிண்ட் எடுத்து தேர்வு வைத்துக்கொள்ளுமாறும் கூறியிருந்தது. இதையடுத்து 10 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு ஒரு மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
சரியான திட்டமிடல் இல்லை
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 திருப்புதல் தேர்வு சரியான திட்டமிடல் இல்லாமல் நடக்கிறது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சரியான நேரத்தில் வினாத்தாள் கொடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். தேர்வு தொடங்க வேண்டிய நேரத்தில் மெயில் மூலம் வினாத்தாள் அனுப்பினால் எப்படி பிரிண்ட் எடுக்க முடியும். அனைத்து அரசு பள்ளிகளிலும் பிரிண்டர் வசதி கிடையாது. இதனால் கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து பிரிண்ட் எடுப்பதற்காக செஞ்சிக்கு வரவேண்டும். அவ்வாறு வந்து சென்றால் காலதாமதம் ஏற்படுகிறது. இனிவரும் காலத்தில் தேர்வு வினாத்தாள் சரியான நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.