பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாகர்கோவில் வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ புகையிலை பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-01 16:52 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ புகையிலை பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்
குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் மற்றும் தக்கலை ஆகிய 4 போலீஸ் சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.
 அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 75-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. அனிதா உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் மேற்பார்வையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலைமையில் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு சுதிர்லால் தலைமையில் நாகர்கோவில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா, போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பியூலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார் ராஜ் ஆகியோர் நேற்று நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
25 கிலோ புகையிலை பறிமுதல்
அந்த சமயத்தில் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வரும் ரெயில் வந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கியதும் போலீசார் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் சில பேக்குகள் கிடந்தன. அந்த பேக்குக்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைகள் சுமார் 25 கிலோ இருந்தது. ஆனால் புகையிலையை கடத்தி வந்தது யார்? என்று தெரியவில்லை. எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே நாகர்கோவில் வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட அனைத்து ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். இச்சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்