கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
வேதாரண்யம் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கவில்லை
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 519 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர்.
இவர்களில் 449 விவசாயிகள் வங்கியில் கடன் பெற்றவர்கள், 75 விவசாயிகள் கடன்பெறாதவர்கள். இந்த வங்கியில் பயிர்க்காப்பீடு செய்த 75 விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுதொகை வழங்கவில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
முற்றுகை போராட்டம்
இதை தொடர்ந்து வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் அனுமதி பேச்சுவார்த்தை நடத்தி பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கவில்லை.
இதையடுத்து பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நேற்று உம்பளச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துளாசபுரம் ஊராட்சி தலைவர் வெங்கடாசலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வேளாண்மை அதிகாரிகள் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக நாளை சமாதான கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு 6 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.