அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்
கல்வராயன்மலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா, உதவிபொறியாளர்கள் அருண்குமார், அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலையில் உள்ள இன்னாடு, ஆரம்பூண்டி, வேங்கோடு, வெள்ளிமலை, மேலச்சேரி, புதுப்பாலப்பட்டு, தொரடிப்பட்டு ஆகிய 7 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, இந்த ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கோடு கிருஷ்ணன், வெள்ளிமலை ரத்தினம், தொரடிப்பட்டு செல்வராஜ், ஆராம்பூண்டி ஆண்டி, துணைத்தலைவர்கள் சிந்தாமணி ராஜேந்திரன், சித்ராசந்திரவேல், ஊராட்சி செயலாளர்கள் சீனிவாசன், ராஜ்குமார், அண்ணாமலை, ராமச்சந்திரன், ஆதிலட்சுமி, சக்திவேல் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.