ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.;

Update:2022-04-01 22:08 IST
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு  கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பளையம் சாலை, காந்திரோடு, சேலம் மெயின்ரோடு, கவரைத்தெரு, மந்தைவெளி வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. 

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேட்டரி ஸ்கூட்டர்கள் மற்றும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மூலம் பேரணியில் பங்கேற்றனர். அவர்கள் கட்டாயம் பொதுமக்கள் ஹெல்மெட் அணிவது, விபத்தில்லா பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி ஹெல்மெட் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்