ரெயிலில் கடத்திய 24 கிலோ கஞ்சா பறிமுதல்.கோவையை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரணை
ரெயிலில் கடத்திய 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோவையை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர்
காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காட்பாடி ரயில்வே பாதுகாப்புபடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது இருக்கைக்கு அடியில் 3 மூட்டைகள் இருந்தது. அதை போலீசார் சோதனை செய்தபோது அதில் 24 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், கோவை ரத்னகுடி பகுதியை சேர்ந்த முரளிதரன் (வயது 45) என்பவர் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை வேலூர் மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.