கழிவுநீர் லாரி திருமண மண்டப சுவரில் மோதி விபத்து
டிரைவரை தாக்கிவிட்டு கழிவுநீர் லாரியை ஓட்டி சென்று தனியார் திருமணமண்டப சுவரில் மோதிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விபத்து
திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். கழிவுநீர் லாரியை ஓட்டி வருகிறார். திருவள்ளூர் பெரியகுப்பம், மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 34). இவர் தனது நண்பர்கள் அன்சார், ஹரிஷ், உதயா உள்ளிட்ட 6 பேருடன் நேற்று முன்தினம் திருவள்ளூர் ரெயில்வே மேம்பாலம் கீழே உள்ள சாலையின் நடுவில் காரை நிறுத்திவிட்டு மது அருந்திக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக கழிவுநீர் லாரியை ஓட்டி வந்த சம்பத்குமார் வழியில் நிறுத்தி இருந்த காரை எடுக்குமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த மேற்கண்ட 6 பேரும் சம்பத்குமாரை தகாத வார்த்தையால் பேசி தாக்கினர். பின்னர் அங்கிருந்த கழிவுநீர் லாரியை ஓட்டிச் சென்றனர். தாறுமாறாக சென்ற லாரி திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
6 பேர் மீது வழக்கு
இந்த விபத்தில் மண்டபத்தின் மதில் சுவர் சுக்குநூறாக நொறுங்கி கழிவுநீர் லாரி திருமண மண்டபத்திற்குள் புகுந்து நின்றது. திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் சாலையோர கடைகளும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படாமல் போனது.
இதுகுறித்து தனியார் திருமண மண்டப உரிமையாளர் மற்றும் லாரி டிரைவர் சம்பத்குமார் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.