போடி அருகே தோட்ட காவலாளி அரிவாளால் வெட்டிக்கொலை உறவினர் கைது
போடி அருகே தோட்ட காவலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.;
போடி:
தோட்ட காவலாளி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவரது மனைவி மாரியம்மாள் (46). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முருகன் போடியை அடுத்த ஊத்தாம்பாறை அருகே உள்ள தாதன்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த தோட்டத்தில் அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(48) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் முருகனின் உறவினர் ஆவார்.
வெட்டிக்கொலை
இந்நிலையில் முருகனை காணவில்லை என்று இன்று ஜெகதீஸ்வரன் அம்மாபட்டியில் உள்ள மாரியம்மாளுக்கு தகவல் கொடுத்தார். இதனால் மாரியம்மாள் பதறிபோய் தனது கணவரை காணவில்லை என்று குரங்கணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முருகன் வேலை செய்த தோட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்குள்ள வாய்க்காலில் தலையில் வெட்டுக்காயங்களுடன் முருகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலறிந்து மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகனுக்கும், ஜெகதீஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது ஜெகதீஸ்வரன் அரிவாளால் முருகனின் தலையில் 3 முறை வெட்டும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
கைது
இதனையடுத்து போலீசார் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜெகதீஸ்வரன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நானும் முருகனும் ஒரே தோட்டத்தில் வேலை செய்து வந்தோம். என்னை முருகன்தான் வேலைக்கு சேர்த்து விட்டார். எனது வேலை திறமையை கண்டு முதலாளி மிகவும் பாராட்டினார். அதை முருகனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் நான் அரிவாளால் முருகனின் தலையில் 3 முறை வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை இழுத்து சென்று தோட்டத்தில் உள்ள தண்ணீர் செல்லும் வாய்க்காலில் போட்டேன். இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.