தீப்பெட்டி தொழிற்சாலைகள் 6-ந்தேதி முதல் 12 நாட்கள் மூடல்
மூலப்பொருட்கள் மற்றும் டீசல் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதால், வருகிற 6 ந் தேதி முதல் 12 நாட்கள் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்து உள்ளனர்
கோவில்பட்டி:
மூலப்பொருட்கள் மற்றும் டீசல் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதால், வருகிற 6-ந் தேதி முதல் 12 நாட்கள் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்து உள்ளனர்.
உற்பத்தியாளர்கள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் சேதுரத்தினம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிறுவனர் ராஜவேல், தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க இணைச்செயலாளர் வரதராஜன் மற்றும் விற்பனையாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் கூறியதாவது:-
மூலப்பொருட்கள் விலை உயர்வு
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான பொட்டாசியம் குளோரைடு, பாஸ்பரஸ், மெழுகு, அட்டை, தீக்குச்சி போன்ற மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையும் அதிகரித்து இருக்கிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி செலவு உயர்ந்திருப்பதால், நேற்று முதல் 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டல் விலையை ரூ.50 உயர்த்தினோம். இதை விற்பனையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து, எங்களுக்கு நியாயமான விலையில் மூலப்பொருட்களை சிட்கோ மூலம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
5 லட்சம் தொழிலாளர்கள்
தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகாசி, நெல்லை, தென்காசி மற்றும் குடியாத்தம் பகுதிகளில் 50 எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 300 பகுதி எந்திர தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்து 500 ஜாப் ஒர்க் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்த தொழில் மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், இளையரசனேந்தல் பகுதிகளில் தினமும் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ரூ.8 கோடி ஆகும். தினமும் 30 லாரிகளில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டிகள் அனுப்பி வருகிறோம்.
ரூ.8 கோடி வருவாய் இழப்பு
தீப்பெட்டி தொழிற்சாலைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தொழிற்சாலைகளில் தேங்கி உள்ளன. இதனால் வருகிற 6-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை 12 நாட்கள் தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூட உள்ளோம்.
இந்த போராட்டத்தால் தினமும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன், ரூ.8 கோடி வருவாய் இழப்பும் ஏற்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.