தென்னையில் ஊடுபயிராக கம்பு சாகுபடி

தென்னையில் ஊடுபயிராக கம்பு சாகுபடி

Update: 2022-04-01 12:35 GMT
உடுமலை பகுதியில் கோடை காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் தீவனத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க தென்னையில் ஊடுபயிராக கம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
களைக்கொல்லி
பொதுவாக கோடை காலம் தொடங்கி விட்டாலே மேய்ச்சல் நிலங்களிலுள்ள புல், பூண்டுகள் வறண்டு பொட்டல் காடு போல மாறி விடும்.மேலும் விளைநிலங்களில் களைக்கொல்லிகள் பயன்பாடு அதிகரிப்பதால் தீவனப்பயிர்களின் வளர்ச்சியும் தடைபடுகிறது. அதுபோன்ற சமயங்களில் கால்நடைகளின் தீவனத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு ஒருசில விவசாயிகள் தங்கள் விளை நிலங்களிலேயே தீவனப் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்தவகையில் உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக கம்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:- 
கம்பு, சோளம் போன்ற சிறுதானியப்பயிர்கள் எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. எனவே கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.இது கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக உள்ளது.
பால் உற்பத்தி
தற்போது கலப்புத் தீவனங்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பு என்பது சவாலான விஷயமாக மாறி வருகிறது.மேலும் உலர் தீவனம், கலப்புத் தீவனம் போன்றவற்றை கால்நடைகளுக்கு வழங்கினாலும் பசுந்தீவனம் கண்டிப்பாக வழங்க வேண்டியது அவசியமாகிறது.இது கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவசியமாகிறது.  தற்போது பலவிதமான வீரிய ஒட்டு ரக பசுந்தீவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 அவை கால்நடைகளின் பசுந்தீவன தேவையை எளிதாக பூர்த்தி செய்யும் வகையில் செழித்து வளர்கிறது. ஆனாலும் அவை குறித்த அச்ச உணர்வு பலரிடம் உள்ளது. இதனாலேயே நமது பாரம்பரிய கம்பு சாகுபடியைத் தேர்வு செய்துள்ளோம்.தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது வெயிலின் தாக்கத்திலிருந்து தென்னங்கன்றுகளை ஓரளவு பாதுகாக்கிறது. மேலும் இதற்கென தனியாக உரம் உள்ளிட்ட எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. கால்நடைகள் விரும்பி உண்ணும் உணவாக உள்ளதால் கோடைகாலத்தில் கால்நடைகளின் தீவனத் தட்டுப்பாட்டைத் தடுக்க முடியும்'என்று விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்