த்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் எள் பயிர் சாகுபடி பரப்பு இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கீழ்பவானி பாசன பகுதிகள்
திருப்பூர் மாவட்டம் முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை முறை தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் எள், சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் பயிறு வகை சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.
எள் சாகுபடிக்கு முதலீடு
இந்த நிலையில் முத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு எள் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி இப்பகுதி விவசாயிகள் ஒரு ஏக்கரில் எள் சாகுபடி செய்வதற்கு விதை எள், வயல் சமன் செய்தல், உழவு கூலி, அடி உரம் இடுதல், பாத்தி கட்டுதல், களை மேலாண்மை, மேல் உரம் இடுதல், எள் அறுவடை, எள் சுத்தம் செய்தல் என ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
தற்போது இப்பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவு நேரங்களில் லேசான குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் மாறி, மாறி நிலவி வருகிறது. இதனால் தற்போது இப்பகுதிகளில் நிலவி வரும் தட்ப வெப்பநிலை காரணமாக எள் செடிகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் சூரிய ஒளிக்கதிர்கள் தாமதமின்றி போதிய அளவு கிடைத்து வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் தற்போது விவசாயிகள் சாகுபடி செய்துள்ள எள் செடிகள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்து உள்ளன.
எள் அறுவடை பணிகள்
இதனை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் எள் அறுவடை பணிகளை இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ளனர். பின்னர் அறுவடை செய்த எள் திருப்பூர் ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை குழு மூலம் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நேரில் கொண்டு சென்று எவ்வித இடைத்தரகு ஏதுமின்றி டெண்டர் ஏல முறையில் விற்பனை செய்து பலன் அடைவார்கள்.
இப்பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டு எள் பயிர் சாகுபடிக்கு கூடுதல் விலை கிடைத்ததால் இந்த ஆண்டும் எள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி உள்ளனர். இதனால் இப்பகுதிகளில் இந்த ஆண்டும் வழக்கத்தை விட எள் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.