சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி - ககன்தீப் சிங் பேடி

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2022-04-01 10:15 GMT
பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு 27 ஆயிரத்து 195 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன்படி, 15 மண்டலங்களில் உள்ள நகர விற்பனை குழுவின் மூலமாக 905 இடங்களில் விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களாகவும், 4 ஆயிரத்து 700 இடங்கள் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாவும் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது.

விற்பனை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட 905 இடங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டில் புதிதாக தெருவோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி, அடையாள அட்டை வழங்குதல், விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களில் அடிப்படை திட்டம் வகுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ‘ஆன்-லைன்’ மூலம் ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ஏற்கனவே விடுபட்ட தெருவோர வியாபாரிகளையும், புதிதாக வியாபாரம் செய்பவர்களையும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்