சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-03-31 22:43 GMT
சேலம், 
எல்லைப்பிடாரியம்மன்
சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 22-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
அதன்பிறகு குமாரசாமிப்பட்டி, வின்சென்ட், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் பக்தர்கள் விமான அலகு குத்தி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
தீ மிதித்து நேர்த்திக்கடன்
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி முன்னதாக மாலையில் அம்மன் பக்தர்களுடன் சின்னதிருப்பதி சென்று மஞ்சள் நீராடி, மஞ்சள் ஆடை அணிந்து ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அருகே உள்ள தெருவில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சரியாக இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழுங்க முதலில் கோவில் பூசாரி பூங்கரகத்துடன் குண்டம் இறங்கினார்.
அப்போது, அங்கிருந்த பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என பக்தி பரவச கோஷங்களை எழுப்பினர். பூசாரியை தொடர்ந்து வரிசையாக ஒவ்வொரு பக்தர்களும் தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒருசிலர் கையில் குழந்தையுடன் தீ மிதித்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கினர்.
போக்குவரத்து மாற்றம்
இதையொட்டி கோவில் வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாத வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. குமாரசாமிப்பட்டி, வின்சென்ட் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பங்குனி திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
நாளை சத்தாபரணம்
நாளை (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி என்ற அலங்காரத்தில் அம்மன் சத்தாபரணம் திருவீதி உலாவும், வருகிற 3-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி முக்கிய வீதிகளில் சாமி ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் எம்.ஆர்.சாந்தமூர்த்தி தலைமையில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்