கடன் தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடப்பட்டதாக புகார்: பேளூர் கூட்டுறவு சங்கத்தில், 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை

கடன் தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில் பேளூர் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

Update: 2022-03-31 22:27 GMT
வாழப்பாடி, 
நகைக்கடன் தள்ளுபடி
வாழப்பாடி அருகே பேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கூட்டுறவு துறை துணை பதிவாளர் யோகவிஷ்ணு புகார் கொடுத்த விவசாயிகளிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார். மேலும் பேளூர் கூட்டுறவு சங்கத்திலும் அன்று இரவு வரை இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று சேலம் கூட்டுறவு சங்க களப்பணி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான கூட்டுறவு துறை அலுவலர்கள் பேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்தனர். அங்கு கடந்த 10 ஆண்டுகளாக வைக்கப்பட்ட நகைகள் மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் என போலியான நகைகள் உள்ளனவா? அந்த தங்க நகைகளில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். 
2-வது நாளாக விசாரணை
மேலும் புகார் செய்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட வங்கி ஊழியர்களிடம் 2-வது நாளாக நேற்றும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குறித்து சேலம் மாவட்ட கூட்டுறவு துறை தலைமை அலுவலர்கள் கூறியதாவது:-
பேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 224 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 180 நகைகளை பயனாளிகள் வாங்கி சென்றுள்ளனர். அந்த நகைகளிலும் ஏதேனும் குறைகள் இருப்பின் தாராளமாக கூட்டுறவு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மேலும் இரு தரப்பினரிடமும் முழுவதுமாக விசாரணை நடத்தி உண்மையிலேயே நகைகள் வெட்டி திருடப்பட்டதா? அல்லது வேண்டுமென்றே கவனக்குறைவாக புகார் கூறப்படுகிறதா? என விசாரணை நடத்தி வருகின்றோம். மேலும் ஒரு வார காலத்திற்குள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நகைகளை வெட்டி திருடப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் தற்போது இந்த கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்து பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன் வாங்கிய விவசாயிகளிடையே இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்