இளம்பிள்ளையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
இளம்பிள்ளையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
இளம்பிள்ளை, ஏப்.1-
இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று அதிகாலை பக்தர்கள் உருளு தண்டம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. படைவெட்டி அம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மாரியம்மன் தேரில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. பின்னர் மாரியம்மன் கோவிலில் இருந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் காடையாம்பட்டி பிரிவு ரோடு வழியாக, சேலம் மெயின் ரோட்டுக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து சவுண்டம்மன் கோவில் வழியாக, இளம்பிள்ளை நகரை சுற்றி கோவிலுக்கு தேர் வந்து சேர்ந்தது. இதையொட்டி வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காய், பழம், பூ, மற்றும் மிளகு, உப்பு, ஆகியவற்றை வழங்கி பூஜைகள் செய்து தங்கள் குடும்பத்தினருடன் தேரில் வலம் வந்த மாரியம்மனை வழிபட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.