கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் மத விவகாரம்; முதல்-மந்திரி, பொதுமக்களுக்கு வேண்டுகோள்
கர்நாடகத்தில் மத ரீதியான மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் மத ரீதியான மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத விவகாரம்
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்தது. கர்நாடக அரசின் இந்த உத்தரவை உறுதி செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் முடிவடைந்து சற்று அமைதி திரும்பியது.
இந்த நிலையில், இந்து கோவில்கள் கடைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வணிகர்கள் வியாபாரம் செய்யக்கூடாது என்று சில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக தட்சிணகன்னடா, உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த விஷயத்தில் தலையிட மாட்டோம் என்று மாநில அரசு கூறிவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் நடத்தும் கடைகளில் ஹலால் இறைச்சி வாங்க கூடாது என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஹலால் முறையிலான இறைச்சி வாங்க வேண்டாம் என்றும், இந்துக்களின் கடைகளில் இறைச்சிகளை வாங்கவும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
பெண் தொழில் அதிபர் கவலை
இதனால் கர்நாடகத்தில் மத ரீதியிலான விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதன்காரணமாக மத மோதல்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்த நிலையில் முற்போக்கு சிந்தனையாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், கர்நாடகத்தில் ஹிஜாப், கோவில்களில் முஸ்லிம்கள் கடைவைக்க எதிர்ப்பு உள்பட முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெறும் மத ரீதியிலான சிக்கல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் பிரபல பெண் தொழில் முனைவோரும், பயோகான் நிறுவன தலைவருமான கிரண் மஜூம்தர் ஷா, கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மத ரீதியிலான கருத்து வேறுபாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர் மதவாதம் உலக அளவில் மோதலை ஏற்படுத்துவதாக அவர் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
உள்ளடக்கிய வளர்ச்சி
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்தில் சில இந்து அமைப்புகள் முஸ்லிம் வணிகர்களை கோவில் திருவிழாக்களில் வியாபாரத்திற்கு தடை விதித்து வருகிறார்கள். மத ரீதியான பிளவு பிரச்சினைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீர்வு காண வேண்டும்.
இந்த பிரச்சினை காரணமாக தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறையில் மதம் கலந்தால், அது அந்த துறையில் இந்தியா தலைமை நிலையில் நீடிப்பதில் சிக்கல் ஏற்படும். கர்நாடகம் எப்போதும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டுள்ளது. அதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒதுக்குவதை தடுக்க வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதவில் அவர் கூறுகையில், நான் கூறிய கருத்தை சில சுயநல நோக்கம் கொண்டவர்கள், அரசியல் கட்சிகளுக்கு எடுத்து செல்கிறார்கள். நான் பெருமைமிக்க கன்னடர். இந்த விவகாரத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அமைதி முறையில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இத்தகைய விவகாரங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து தீர்வு காண வேண்டும். இது பா.ஜனதா பிரச்சினையாக ஏற்படுத்துவதில் ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அமைதி மற்றும் வளர்ச்சிக்கு கர்நாடகம் பெயர் பெற்றது. அனைவரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சீருடை (ஹிஜாப்) விவகாரம் முடிந்துவிட்டது. நாம் இத்தனை ஆண்டுகளாக நமது நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.
எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறு பொதுமக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் வரும்போது, அவற்றுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண முடியும். அதனால் அனைவரும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.