அம்மாபேட்டை அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2022-03-31 21:06 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு முந்தைய அரசால் போடப்பட்டது. இந்த குடிநீர் குழாய் இணைப்பு பெற ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.2 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் டெபாசிட் தொகையை யாரும் கட்டவில்லை. 
இதனால், குடிநீர் இணைப்பு பெற்ற அந்தந்த வீடுகளில் உள்ள 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் டெபாசிட் தொகையை கட்ட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. எனினும் டெபாசிட் தொகையை யாரும் கட்டவில்லை. மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நேற்று வேலைக்கு உரிய அட்டையை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. 
இதனால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆத்திரம் அடைந்து குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சித்தார்-பூனாச்சி ரோட்டின் குறுக்கே உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு ஊராட்சி அலுவலகத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணலாம்,’ என்றனர்.

மேலும் செய்திகள்