மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்குவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Update: 2022-03-31 20:57 GMT
ஈரோடு
மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்குவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தனி நபர் தொழில்
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான பயனாளிகள் பங்களிப்பு திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர்கள், மீன் வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்புக்குழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனி நபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
பயனாளிகள் சார்ந்த இந்த திட்டத்தின் கீழ், புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்து உள்ளீட்டு மானியத்துடன் மீன்வளர்ப்பு, நடுத்தர அலகு முறை உள்ளீட்டு மானியத்துடன் மீன்வளர்ப்பு, சிறிய அலகு முறை மீன்வளர்ப்பு, நீர் மறுசுழற்சி முறையில் மீன் வளர்ப்பு, புறக்கடை அலங்கார மீன்வளர்ப்பு, நடுத்தர அலகு அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு திட்டம் ஆகியவற்றில் பொது பிரிவினருக்கு 40 சதவீதமும், ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.
மானியம்
மேலும் தொழில் முனைவோர்களில் பொது பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும், அதாவது மொத்த திட்ட  மதிப்பீட்டில் மானியத்தொகையின் உச்சவரம்பு ரூ.1 கோடியே 25 லட்சமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிருக்கு 30 சதவீதம் மத்திய, மாநில அரசின் நிதி உதவியும், அதாவது மொத்த திட்ட திப்பீட்டில் மானிய தொகையின் உச்சவரம்பு ரூ.1 கோடியே 50 லட்சமும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், ஈரோடு பெருந்துறை ரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்