தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 13351) கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரெயிலில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது டி.எல். 2-வது பெட்டியில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சரோஜி நாயக் (வயது 26) மற்றும் ஆனந்த் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை நடத்தினர். அதில் 6½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.