திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடக்கம்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக, நேற்று கோவிலில் காப்பு கட்டி தீமிதி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மண்டகப்படிதாரர்களால் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு திரவுபதி அம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்கள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும். ஒவ்வொரு நாளும் இரவில் மகாபாரத கதை பக்தர்களுக்கு சொல்லப்படும். அதில் அரக்கு மாளிகை, அர்ஜுனன் தபசு, மாடு திருப்புதல், அரவான் களப்பலி, சக்கரவாகம்கோட்டை ஆகியவை நடைபெறும். இறுதி நாளான வருகிற 8-ந் தேதி அன்று காலை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்கு பிறகு பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து தனித்தனியாக வீதி உலா நடைபெறும். அன்று மாலை 5 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 10-ந் தேதி அகோரவீரபத்திரர் பூஜையும், 15-ந் தேதி விடையாற்றி வைபவமும் நடைபெற உள்ளது.