தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.

Update: 2022-03-31 19:55 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.

நீச்சல் பயிற்சி வகுப்பு

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தில் கோடைகால விடுமுறையினை முன்னிட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த பயிற்சி வகுப்பு நேற்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்புகள் 6 கட்டங்களாக (12 நாட்கள் வீதம்) பயிற்சி நடைபெற உள்ளது. 12 நாட்கள்வீதம் என ஜூன் மாதம் 22-ந்தேதி வரை பயிற்சிகள் நடைபெறுகிறது.

சான்றிதழ்

பயிற்சி வகுப்புகள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் இருபாலர்களுக்கும் நடைபெறுகிறது. 9 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், ஆடவர் மற்றும் மகளிர் ஆகியோர் நீச்சல் கற்று கொள்ள பயிற்சி வகுப்பில் சேரலாம். நீச்சல் பயிற்சியாளரை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்கு கட்டணமாக ரூ.1,500 மற்றும் ஜி.எஸ்.டி. 270 சேர்த்து ரூ.1,770-க்கு, Sports Development Authority of Tamilnadu Chennai என்ற முகவரிக்கு வரைவோலை எடுத்து வரவேண்டும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின் போது சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் நீச்சல் குள வளாகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குறைந்த கட்டணம்

குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்