ஆலங்குடி அருகே விவசாயி அடித்துக்கொலையா?

ஆலங்குடி அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-31 19:37 GMT
ஆலங்குடி, 
விவசாயி சாவு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள  மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட நம்பன்பட்டி‌ பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40), விவசாயி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் சுந்தரமூர்த்தி தனது வீட்டின் அருகே  ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேரிடம் விசாரணை
பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சுந்தரமூர்த்தியை யாரேனும் அடித்துக்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்